காதல் காவியம் - விண்ணைத்தாண்டி வருவாயா
மனம் லயித்து, கண்ணோரங்கள் கசிய இளமையின் அற்புதமான தருணங்களை உணர்ந்து ரசிக்க ஒரு அழகிய காதல் காவியம் தந்த கௌதம் மேனனுக்கு முதலிலேயே பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்!
இந்தப் படம் குறைகளே இல்லாத படமல்ல.. குறைகள் இருக்கின்றன, மனதுக்குப் பிடித்தவளின் முகத்தில் அரிதாய் அரும்பும் பருக்கள் போல...! ஆனால் காதலில் விழுகிறவனுக்கு அவை பருக்களல்ல.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத கிளர்ச்சி தரும் அழகிய அடையாளங்கள்! அப்படித்தான் இந்தப் படத்தின் குறைகளும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சிம்பு ஏன் எப்படி என்றெல்லாம் யோசிக்கக் கூட அவகாசமில்லாத ஒரு நாளில், காற்றில் கூந்தல் அலைய தேவதையாய் வரும் த்ரிஷாவை முதலில் பார்க்கிறார்
அந்த வயதில் நடக்கும் ரசவாத மாற்றம் அவருக்குள்ளும். காதலில் விழுகிறார்!
முதலில் மறுத்து, மழுப்பி, நட்பாகி, நட்பின் எல்லை மீறக்கூடாது என்று தெரிந்தே பொய் சத்தியங்களைச் செய்து, பின் அதை உடைத்து உதடு வழியாக இதயம் பரிமாறுகிறார்கள் இருவரும்.
வழக்கம் போல மதமும் இனமும் இந்தக் காதலிலும் குறுக்கிட, அதை ஜஸ்ட் லைக் தட் உடைக்கிறது காதல்.
ஆனால் மனங்களின் பிணக்கை உடைக்க முடியாமல் தோல்விப் பாதையில் திரும்புகிறது. காதலர்கள் பிரிகிறார்கள்... மீண்டும் இணைகிறார்களா என்பதை சின்ன வித்தியாசத்துடன், ஆனால் சற்றே குழப்பமான க்ளைமாக்ஸுடன் சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன்.
மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமா மீது மோகம் கொண்டு அலையும் இளைஞனாக வரும் தமிழ்ப் பையன் சிம்புவுக்கும், பொலாரிஸில் பணியாற்றும் ஹை மிடில்கிளாஸ் மலையாளியான த்ரிஷாவுக்கும் காதல் அரும்பும் கணங்கள், சூழல், அவர்களின் நெருக்கம், விலகல், பிணக்கு, இணக்கம்... என உணர்வுகளை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.
இந்தக் கதைக்கு அட்டகாசமாகப் பொருந்துகிறார் சிம்பு. இந்த வெற்றி அவரை மீண்டும் குரங்காட்டம் போட வைக்காமலிருந்தால், இன்னும் சில நல்ல படங்கள் ரசிகர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.
த்ரிஷா ஆரம்பத்தில் சுமாராகத் தெரிந்தாலும், முடிவு நெருங்க நெருங்க நமக்குள் ஒருவராகவே மாறிப் போகிறார். தனது பாத்திரத்தை அத்தனை அழகாக உணர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக அவரது புதிரான குணத்தை அவர் வெளிப்படுத்தும் விதம்... எதற்காக அத்தனை நெருக்கம்... ஏன் அந்த திடீர் விலகல்?.
ஏஆர் ரஹ்மான்- கௌதம் மேனன் கூட்டணி எடுத்த எடுப்பிலேயே இதயங்களைக் கொள்ளை கொள்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் புதிய வர்ணத்தையும், வார்த்தைகளால் சொல்ல முடியாத உற்சாகத்தையும் வாரி இறைக்கிறது ரஹ்மானின் இசை.
'மன்னிப்பாயா...' பாடலில் திருக்குறளை ரஹ்மான் மிக்ஸ் செய்திருக்கும் அழகுக்கே இன்னொரு ஆஸ்கார் தரலாம்.
ஓமணப் பெண்ணே, ஹோசன்னா பாடல்கள் இந்த ஆண்டின் இளமை கீதங்கள்.
சிம்புவுக்கு நண்பராக வரும் கணேஷ் சுவாரஸ்யமான பாத்திரம். நகைச்சுவை இல்லாத குறையை சரிசெய்கிறார்.
மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவும், ராஜீவனின் கலை நேர்த்தியும் சிறப்பு. இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளை இன்னும்கூட ஷார்ப்பாக்கியிருக்கலாம் எடிட்டர் ஆண்டனி.
அழகான விருந்தில் அசிங்கத்தை வைத்த மாதிரி, அந்த கெட்ட வார்த்தை காட்சிகள். கௌதம் மேனன் தன் படத்தில் தேம்ஸைக் காட்டினாலும், வாயிலிருந்து வரும் கூவத்துக்கு சுய சென்சார் செய்துகொள்வது அவசியம்.
திரும்பத் திரும்ப ஒரே வசனத்தை சொல்வது எரிச்சல். எது நிஜ க்ளாமாக்ஸ், எது சினிமாவுக்குள் வரும் சினிமா க்ளைமாக்ஸ் என்பதில் முதலில் சற்று குழப்பம் ஏற்படத்தான் செய்கிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா மக்கள் கருத்து வீடியோ கிளிக்
விண்ணைத் தாண்டி வருவாயா பற்றி கௌதம் மேனன்கௌதம் மேனனின் காக்க காக்க படத்தில் என்னைக் கொஞ்சம் மாற்றி… பாடலில் தோன்றும் சூர்யா-ஜோதிகா போல் விண்ணைத் தாண்டி வருவாயா ஜோடி இருப்பது போன்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனாலும்... காதலைப் பக்கம் பக்கமாக பேசுவதை விட, உணர்ந்து ரசிப்பதுதான் உன்னதமான உணர்வுகளைத் தரும். அந்த உணர்வுகளை அனுபவிக்க ஒருமுறை இந்தப் படம் பார்க்கலாம்!
உணர்வை தரும் விமர்சனம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉணர்வு பூர்வமான விமர்சனம். வாழ்த்துக்கள்.
ReplyDelete