Friday, September 11, 2009

விண்வெளியில் இணையம்

புவியிலுள்ள இணைய வழிமுறைகளை போலன்றி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கான தொடர்ந்த இணைப்பில் தடை தாங்கும் வலைபின்னல் மென்பொருள் இல்லை. சென்றடைய வேண்டிய முனையத்தை கண்டுபிடிக்க முடியவிட்டால் அனுப்பப்படுகின்ற தரவுகள் அழிக்கப்படாத வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் சென்றடைய வேண்டிய முனையத்திற்கு பாதுகாப்பாக சென்றடையும் வரை பாதுகாத்து வைத்திருக்க வசதியுள்ளது. உடனடியாக சென்றடைய வேண்டிய பாதை இல்லாவிட்டால் இவ்வாறு சேமித்து அனுப்பப்படுகின்ற முறையால் தகவல்கள் இழப்பு தவிர்க்கப்படும். அதேவேளை தகவலும் சென்றடைய வேண்டியவருக்கு பின்னர் சரியாக போய் சேரும்.

இன்றைய விண்வெளி தகவல் தொடர்பில் ஒவ்வொரு இணைப்பிற்கும் தகவல்கள் அனுப்புகின்றபோது ஒழுங்கான கட்டளைகள் குறிப்பாக உருவாக்கப்பட வேண்டும். அதாவது என்ன தகவல், எப்போது அனுப்புவது, எங்கே அனுப்புவது ஆகிய எல்லா கட்டளைகளையும், அனுப்புகின்றவர்கள் நினைக்கும் விதத்தில் வழங்குகின்ற வசதியோடு அமைய வேண்டும். பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் உயர்தரத்தில் வடிவமைக்கப்டும் தடை தாங்கும் வலைபின்னல் மென்பொருளில் இந்த வசதிகள் அனைத்தும் இயல்பாகவே அமைந்திருக்கும் என்று நாசாவின் தடை தாங்கும் வலைபின்னல் மென்பொருள் சோதனை மையத்தின் மேலாளர் Leigh Torgerson கூறினார்.

நாசா, இந்த தடை தாங்கும் வலைபின்னல் மென்பொருளை அக்டோபர் திங்களே சோதனை செய்ய தொடங்கியது. நாசாவின் அண்டவெளி வலைபின்னலின் ஊடாக தகவல்கள் வாரத்திற்கு இருமுறை அனுப்பி காட்டப்பட்டன. இதற்கு நாசாவின் எக்ஸ்போசி விண்கலனை செவ்வாய் கோளிலிருந்து தகவல் அனுப்பப்படுகின்ற செயற்கைக்கோளாக பொறியியலாளர்கள் பயன்படுத்தினர். எக்ஸ்போசி விண்கலன் Hartley 2 என்ற வால் நட்சத்திரத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆராயும் தொடங்கும். இந்த கோள்களுக்கு இடையிலான அண்டவெளியில் இணைய தகவல் தொலைத்தொடர்பு வசதி புதிய வகை விண்வெளி ஆய்வுப்பணிகளை சில ஆண்டுகளில் உருவாக்கும் என்று நாசா எண்ணுகிறது.

பூமியில் இருந்துகொண்டே விண்வெளியில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களிடமும், விண்வெளி சுற்றுலா செல்வோருடனும் இணையம் மூலம் தொடர்பு கொண்டு அளவளாவிக்கொள்ளும் காலம் நெருங்கி வருவதை இது காட்டுகிறது அல்லவா!

மனிதன் ஒரு சமுக விலங்கு என்று கூறுவார்கள். அவனை சுற்றியுள்ள சமூகமின்றி தனித்தீவாக அவனால் காலம் கடத்த இயலாது. நாம், உறவுகளின் பின்னல்களால் உருவாக்கப்பட்டுள்ளதே இதற்கு எடுத்துக்காட்டு. உறவுகளை வளர்த்து கொள்ளவும், தொடர்புகளை தொடரவும் பல்வேறு வழிமுறைகளை நாம் கையாளுகின்றோம். குறிப்பாக, தொலைபேசி கண்டுபிடிப்பு தொலைதூரத் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஊடகங்கள் நமக்கு தெரியப்படுத்தி, எங்கெங்கோ இருக்கும் மக்களோடு ஒருவித தொடர்பை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில் நாம் வளர்க்கின்ற நெருக்கமான தொடர்புகளை தான் என்றும் விரும்புகின்றோம். தொலைபேசிக்கு வடம் மூலம் இணைப்பு இருக்கவேண்டும் என்ற நிலைமாறி, வட இணைப்புகளின்றி பேசிக் கொள்ளும் வகையில் செல்லிடபேசி உலாவர தொடங்கியது. அடுத்ததாக, நொடிப்பொழுதில் அனைவரையும் நமது வீட்டு முற்றத்தில் பார்த்து சந்திப்பது போன்ற உணர்வை இணைய வசதி தருகிறது. இவ்வாறு புவியிலான தொலைத்தொடர்பு வசதிகளின் வளர்முகத்தோடு, விண்வெளியை நோக்கி அறிவியலாளர்களின் ஆய்வு திரும்பியுள்ளது.

விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்படுகின்ற விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் புவியிலுள்ள அவற்றின் கட்டுப்பாட்டு மையங்களால் தான் இயக்கப்படுகின்றன. இந்த மையங்கள் அனுப்புகின்ற சமிக்ஞைகளை பெற்று கொள்ளும் அதற்கான விண்கலன் அல்லது செயற்கைக்கோள்கள் பதில்கள் அனுப்புகின்றன. பூமியில் அதற்கு தேவையான எல்லா அதிநவீன வசதிகளும் கட்டியமைக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு தொலைத்தொடர்பு வசதிகளை விண் கோள்களுக்கு இடையே உருவாக்கும் முயற்சிகளை அறிவியலாளர்கள் மேற்கொண்டனர். புவியில் என்றால் தகவல் அனுப்புகின்ற அல்லது பெறுகின்ற கருவிகளை, அதனை தாங்கி நிற்கின்ற கம்பங்களை திட்டமிட்டு எளிதாக அமைத்து விடலாம். ஆனால் விண்வெளியில் அவற்றை எங்கு கொண்டு வைப்பது? இத்தகைய கோள்களுக்கு இடையிலான தொலைதொடர்புகளை இணையவசதி மூலம் மேற்கொள்வதற்கான மென்பொருள் கண்டுபிடிக்கப்ட்டு அதற்கான முதல் ஆய்வை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்தியுள்ளது.


விண்வெளி தகவல் தொலைத்தொடர்பு வலைபின்னல் மாதிரியை இணையம் மூலம் முதல் முறையாக சோதனை செய்வதில் நாசா வெற்றியடைந்துள்ளது. இதற்காக DTN அதாவது Disruption-Tolerant Networking என்று சொல்லப்படுகின்ற தடை தாங்கும் வலைபின்னல் மென்பொருளை நாசா பொறியியலாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். 32 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாசாவின் எக்ஸ்போசி விண்கலத்திற்கு இந்த வலைபின்னல் மூலம் பல படங்கள் அனுப்பப்பட்ட சோதனை முயற்சி மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோள்களுக்கு இடையில் புதிய தொலைத்தொடர்பை உருவாக்குவதில் முதல் படியாக இது பார்க்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாசாவும் கூகுள் குழுமத்தின் துணைத் தலைவரான Vint Cerf பும் விண்வெளி தகவல் தொலைத்தொடர்புக்கான மென்பொருள் ஒன்றை உருவாக்க இணைந்தனர். சுருக்கமாக DTN எனப்படுகின்ற தடை தாங்கும் வலைபின்னல் மென்பொருள் தகவல்களை அனுப்புகின்ற முறை தற்பொது இணையத்தில் பயன்படுத்துகின்ற தகவல் அனுப்பும் வழிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது

புவியில் இணைய இணைப்புகளில் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றபோது விண்வெளியில் மேலதிக பிரச்சனைகள் எழுவது இயல்பே. எனவே தகல்களை பெறுவதில் காலதாமதங்கள், இடர்பாடுகள் மற்றும் தொடர்பற்று போதல் ஆகிய சூழ்நிலைகளை தாங்கி கொள்ளும் உறுதியுடையதாக உருவாக்கப்படும் மென்பொருள் இருத்தல் வேண்டும். விண்கலன் அல்லது செயற்கைக்கோள் ஒரு கோளின் பின்புறமாக நகர்கின்ற போதோ அல்லது விண்வெளியில் சூரிய வெப்பம் அதிகரிக்கின்ற சூரிய புயல் ஏற்படுகின்ற போதோ விண்வெளி தகவல் தொலைத்தொடர்பில் நீண்டகால தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம். இந்த எதிர்பார்ப்புக்களை தடைதாங்கும் வலைபின்னல் மென்பொருள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!