Monday, June 28, 2010

சுவாமி விபுலாநந்தரின் இன்மலர்கள்

அடியேன் பெற்ற இன்பம் நண்பர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்கே இடுகிறேன்.
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.


மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.


பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா?
உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது



1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!