Saturday, August 1, 2009

இரத்ததானம்

எழினி, காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன் ஆகியோரை இன்று வரை வரலாறு வாழ்த்துகிறது. இவர்கள் எல்லாம் யார் என்று ஒரு சிலர் கேட்கலாம். கடையேழு வள்ளல்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பொன்னையும் பொருளையும் மனிதர்களுக்கு வாரி வழங்கிய இவர்கள் விலங்குகளுக்கும், செடி கொடிகளுக்கும் இரக்கம் காட்டியதால் இன்றும் போற்றப்படுகிறார்கள். முல்லை கொடிக்கு தேர் கொடுத்ததாக பாரி மன்னர் புகழப்படுகிறார். புறாவின் எடைக்கு இணையாக தன்னுடைய தொடை சதையே வழங்கியதாக சிபி சக்கரவர்த்தி வாழ்த்தப்படுகின்றார். இவ்வாறு வள்ளல் தன்மைக்கு ஈடிணையில்லாமல் இருந்த அவர்கள் இன்றும் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்.

தாராளதன்மை, பல வகைகளில் வெளிப்படலாம். நன்கொடை, அன்னதானம் ஆகியவை கொடையின் வடிவங்களே. கொடையாக வழங்கப்படும் பொருளை அல்லது செல்வத்தை விட தாராளமான மனநிலையே உண்மையான வள்ளல் தன்மையை வெளிக்காட்டும். தானத்தில் சிறந்தது இரத்ததானம். அதிலும் சிறந்தது உடல் உறுப்புகள் தானம். கண், சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை தானமாக வழங்குவது நவீன உலகில் மேலாக போற்றப்படுகின்ற நிகரற்ற கொடைகளே. மனித நேயமுடைய அன்புள்ளங்களால் தான் இத்தகைய கொடைகளை அளிக்க முடியும். சொல் நயங்களால் பேசப்படுகின்ற தலைப்பு அல்ல இது. உணர்வுபூர்வமாக செயல்படுத்த வேண்டியது. இன்று அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாக பலரால் செயல்படுத்தப்படுவது தான் இரத்ததானம்.

உடலிலுள்ள ஒவ்வொரு நாடி நரம்புகளுக்கு ஊடாக ஓடுவது தான் இரத்தம். சோதனைக்குழாய் மூலமாக குழந்தை கருத்தரிப்பதை சாத்தியமாக்கிய மருத்துவ முன்னேற்றத்தால்கூட செயற்கை இரத்தத்தைத் தயாரிக்க இன்றளவும் இயலவில்லை. இரத்த இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும். எனவே தான்

"மனித நேயத்தை சொற்களால் அல்ல

இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்"

என்ற அறைகூவலோடு செயல்படுத்துகின்ற செல்கள் அனைத்தும் உயிர் அளிப்பதற்கு சமமாக போற்றப்படுகின்றன.

இரத்ததானம் உயிர்காக்கும் முறையாக அனைவராலும் போற்றப்படும் அதேவேளையில் அவ்வாறு இரத்ததானம் செய்வதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படும் என்று எண்ணுகின்ற மக்களும் நம்மிடம் இல்லாமல் இல்லை. குறிப்பாக அடிக்கடி இரத்ததானம் செய்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற தப்பெண்ணம் பலரிடம் உள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள் அடிக்கடி இரத்தானம் செய்வது கேடில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளது. இரத்தம் கொடுப்பது புற்றுநோயை உருவாக்கும் என்று யாரும் கவலைப்பட தேவையி்ல்லை. இரத்ததானம் நன்மையையே கொண்டு வருகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. அடிக்கடி இரத்ததானம் செய்கின்றவர்களில் புற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது என்று மருத்துவர் Gustaf Edgren வழிநடத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

மருத்துவர் Edgren பேட்டியளித்தபோது அடிக்கடி இரத்ததானம் செய்வது உடலை பாதிக்கிறது என்று எதிர்மறையாக கூறப்படுகின்ற கூற்றுகளை தெரிவித்ததோடு சாதகமான விளைவுகளையும் விளக்கினார். அதாவது உடலிலிருந்து அடிக்கடி இரத்தம் எடுக்கப்படுவதால் எலும்பு மஞ்சையிலுள்ள இரத்த உயிரணுக்களின் உற்பத்தி அதிகமாகிறது. அவ்வாறு அதிகரிக்கப்பட்ட உற்பத்தியால் உருவாகும் உயிரணுக்களின் பிரிவு அல்லது வளர்சிதை மாற்றம் இரத்தத்தை உருவாக்கும் திசுக்களில் கேடு உருவாக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அத்தோடு இரத்தம் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் புற்றுநோயோடு தொடர்புடையதாகும் என்று சிலர் பாதகமாக முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் இரத்ததானத்தின் சாதகமான விளைவுகளை உடல் நலத்தை உறுதிப்படுத்துகிறது. அதாவது உடலில் அதிகளவு இரும்பு சத்து சேமிக்கப்பட்டிருப்பது இதய நோய் மற்றும் குறிப்பிட்ட வகை புற்றுநோய்க்கு இட்டு செல்லக்கூடும். எனவே அடிக்கடி இரத்ததானம் செய்தால் அவ்வாறு அதிகமாக உள்ள இரும்பு சத்து குறைகிறது.. அதனால் உடல்நல முன்னேற்றம் தான் கிடைக்கிறது. உலகில் அதிகமான மக்கள் இரத்ததானம் செய்கின்றனர். எனவே சிறிய அளவிலான புற்றுநோய்க்கான வாய்ப்புக்கூட பெரிய விடயமாகும். ஆனால் இரத்தம் கொடுப்பதால் அத்தகைய ஆபத்துகள் இல்லை உடல் நலத்துக்கான கூறுகள் தான் உள்ளன இதுவே இரத்ததானத்தை வளர்க்கும் அம்சமாக இருக்கிறது என்று மருத்துவர் Edgren பேட்டியின்போது தெரிவித்தார்.

இரத்ததானத்திலான பாதிப்பு பற்றி அதிகமாக அறிந்து கொள்வதற்காக Edgren குழுவினர் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் இரத்தவங்கிகள் மற்றும் மருத்துவமனைகளில் இரத்தத்தை கொடையாக வழங்கிய தனிநபர்களின் மருத்துவ பதிவேடுகளை ஆய்வு செய்தனர். 1968 முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஒரு முறையாவது இரத்ததானம் செய்த பதினொரு இலட்சத்து பத்தாயிரத்து இருநூற்று பன்னிரண்டு பேரின் பதிவேடுகள் ஆராயப்பட்டன.

முடிவில் அடிக்கடி இரத்தானம் செய்வதற்கும் புற்றுநோய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. மேலும் ஆண்களில் இரத்ததானம் வழங்கிய எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் கல்லீரல், நுரையீரல், குடல், வயிறு மற்றும் தொண்டைப் பகுதிகளிலான புற்றுநோய் வாய்ப்புகள் குறைந்ததையும் தெரிந்து கொண்டனர். இது இரத்தம் அடிக்கடி கொடுக்கப்பட்டதால் அதிகமாக சேமிக்கப்பட்டிருந்த இரும்பு சத்தின் குறைவால் ஏற்பட்டதாகும்.

இரத்தம் இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும். வேறு எதைக்கொண்டும் சமாளிக்க முடியாது என்பது நாமறிந்ததே. இந்நிலையில் புதிய இரத்தத்தை விட பல நாட்கள் சேமிக்கப்பட்ட இரத்தம் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டால் பல்வேறு உடலநல சிக்கல்கள் உருவாகுகிறன என கூறப்படுகிறது. அதாவது 15 நாட்களுக்கு மேலாக சேமிக்கப்பட்டிருந்த இரத்தம் இதய அறுவை சிகிச்சை நோயாளர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்களுக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்படுத்கிறன என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புதிய பிரிட்டன் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு கிளீவ்லாண்ட் மருத்துவ மனையில் இதய அறுவை சிகிச்சையின் போது இரத்தம் செலுத்தப்பட்ட 6000 நோயாளிகளிடம் நடத்தப்பட்டது. பாதிக்கு சற்று குறைவான நோயாளிகள் ஏறக்குறைய 14 நாட்கள் சேமிக்கப்பட்ட புதிய இரத்தத்தையும், பிறர் அதற்கு மேற்பட்ட நாட்கள் சேமிக்கப்பட்ட பழைய இரத்தத்தையும் பெற்றுள்ளனர். பழைய இரத்தத்தை பெற்றவர்களிடத்தில் 89 விழுக்காட்டினரும் புதிய இரத்தம் பெற்றவர்களிடத்தில் 93 விழுக்காட்டினரும் ஓராண்டு உயிரோடு இருந்ததை கண்டறிந்தனர். மேலும் பழைய இரத்தம் செலுத்தப்பட்டவர்களிடத்தில் அதிமான உடல்நலக் குறைவுகள் காணப்பட்டன. அதிலும் சிறுநீரக செயல்பாடின்மை, இரத்தத்தலான நோய்கள் மற்றும் பல உறுப்புகள் செயல்பாடற்றநிலை கொண்ட நோயாளிகளிடத்தில் அதிக சிக்கல்கள் ஏற்படுத்தியதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தானமாக அல்லது பிறரிடமிருந்து எடுக்கப்படுகின்ற இரத்தத்தை 42 நாட்கள் சேமிக்கலாம் என்று வரையறுத்துள்ளது. ஆனால் சேமிக்கப்படுகின்ற இரத்தத்திலான சிவப்பு அணுக்கள் 15 நாட்கள் தான் உயிரோடு இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. இத்திசையிலான அதிகமான ஆய்வுகள் இரத்தம் சேமிக்கப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்படுகின்ற கால அளவுகளில் மாற்றங்களை கொண்டு வரலாம். நமது நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு இரத்தம் செலுத்தப்படும்போது புதிய இரத்தம் செலுத்தப்படுவதில் அதிக கவனம் கொணண்டால் அவர்களின் உடல் நலத்தை அதிகமாக பேணலாமே.

சிறந்த கொடை எது எனப்பார்த்தால் பலர் நம்மிடம் மிகுதியாக உள்ளதிலிருந்து வழங்கினாலும் நம்மை பாதிக்கின்ற முறையில் அடுத்தவருக்கு வழங்கப்படும் கொடைகளே உயர்வாக போற்றப்படுகின்றன. நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயிரோடு இருக்கும். பின்னர் அவை தானாகவே அழிந்து புதியவை தோன்றும். நாம் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் இயற்கை. ஆக, அழிந்து பின் திரும்ப உருவாகப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே?


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!