Sunday, April 26, 2009

அட்சய திருதியை: தங்கம் விலை உயர்ந்தது!

அட்சய திருதியைக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தங்கம் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.இதனால் வீழ்ச்சிப் போக்கில் இருந்த தங்கத்தின் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. இன்று மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.176 உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து நல்ல நிலையில் இயங்குவதாலும் தங்கத்தின் சந்தை அளிப்பு அளவு அதிகமாக இருந்ததாலும், தங்கம் விலை தொடர்ந்து மூன்று வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. குறிப்பாக கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை இறங்கு முகமாகவே இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 27-ந்தேதி அட்சய திருதியை வருகிறது. அன்று தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தைக் குவிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுவதால் (ஏற்படுத்தப்பட்டிருப்பதால்?!), அந்த குறிப்பிட்ட நாளன்று தங்கம் வாங்க கடந்த சில ஆண்டுகளாக மக்கள் போட்டி போட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு, அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு செய்யும் அளவுக்குப் போய்விட்டார்கள். இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே நிலைதான். இதனால் தங்கம் விலையில் மீண்டும் உயர்வு காணப்படுகிறது. நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.1342-க்கும் 1 பவுன் தங்கம் ரூ.10736-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் - வெள்ளி மார்க்கெட்டுக்கு விடுமுறை. எனவே விலையில் மாற்றமில்லை. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரித்து, ரூ.10,912-க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.1364. நாளையும் நாளை மறுநாளும் கூட இதே நிலை நிலவலாம் என நகை வியாரிகள் கூறியிருப்பதால், இப்போதே முடிந்தவரை வாங்கும் முயற்சியிலும் சிலர் இறங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!